துண்டு பிரசுரம் வழங்கிய தவெக தொண்டர்கள்.. கைது செய்யப்பட்ட ஆனந்த்.. என்னதான் நடக்குது?
தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்களும் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்தார். சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை தியாகராயநகர் மேட்லி சாலையில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரி வாசலில் தமிழக வெற்றிக் கழக தென்சென்னை மாவட்ட மகளிர் அணி சார்பாக மகளிர் அணி பொறுப்பாளர் வனிதா தலைமையில் 28 பெண் நிர்வாகிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தலைவர் விஜய் எழுதிய கட்சியின் லெட்டர் பேட் கடிதத்தை கல்லூரி மாணவிகளிடம் கொடுப்பதற்காக வந்தனர்.
கல்லூரி வாசலில் கூடியிருந்த கட்சியினரை அனுமதி இல்லாமல் துண்டு பிரசுரம் வழங்கக்கூடாது என மாம்பலம் போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியதால் 48 பேரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைதான அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் 19-க்கும் மேற்பட்டோர் பேருந்து முன்பு அமர்ந்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான கட்சி நிர்வாகிகளை சந்தித்துவிட்டு திரும்பிய தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச் செயலாளர் என். ஆனந்தையும் மாம்பலம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட அனைவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.
What's Your Reaction?