ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. விஜய் கண்டனம்

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Dec 30, 2024 - 19:03
 0
ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. விஜய் கண்டனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். இதையடுத்து, சென்னை தியாகராயநகர்  பகுதியில் அமைந்துள்ள  தனியார் மகளிர் கல்லூரி வாசலில் தமிழக வெற்றிக் கழக மகளி அணியினர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தலைவர் விஜய் எழுதிய கட்சியின் லெட்டர் பேட்  கடிதத்தை கல்லூரி மாணவிகளிடம் கொடுப்பதற்காக வந்தனர். 

கல்லூரி வாசலில்  கூடியிருந்த கட்சியினரை அனுமதி இல்லாமல் துண்டு பிரசுரம் வழங்கக்கூடாது என மாம்பலம் போலீசார் எச்சரித்தனர்.  இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தியாகராயநகர் பேருந்து நிலையத்தில்  பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியதால் 48 பேரை மாம்பலம் போலீசார்  கைது செய்தனர். கைதானவர்கள் சந்தித்துவிட்டு திரும்பிய தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்தையும் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விஜய் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.  இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். 

சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.  கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?  இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow