கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர்.

Aug 7, 2024 - 07:48
Aug 7, 2024 - 09:25
 0
கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
Kalaignar Karunanidhi Memorial Day

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதி, தனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி.

இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர்  கலைஞர் கருணாநிதி. இதில் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்கள் அமைத்தது, உழவர் சந்தை கொண்டு வந்தது, சென்னையில் மெட்ரோ ரயில் கொண்டு வந்தது, மறுமண நிதி உதவித் திட்டத்தை அறிமுகம் செய்தது, குடிசை மாற்று வாரியம், மகளிர் சுய உதவிக்குழு திட்டம், பள்ளிகளில் சத்துணவுடன் முட்டை, கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து முத்திரை பதித்துள்ளார்.

மேலும் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் எளிமையான முதல்வராக இருந்தவர் கருணாநிதி. கலைஞரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கருணாநிதி திருவுருவப் படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த உள்ளனர். இதேபோல் திமுகவினர் தங்களது வீடுகளிலும்  கருணாநிதிக்கு நன்றியை செலுத்த வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கூறி இருந்தார்.

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதேபோல் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு ஐ பெரியசாமி , எம் ஆர் கே பன்னீர்செல்வம், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பல்வேறு திமுகவினர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து தொடங்கியது. திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். கலைவாணர் அரங்கத்தை கடந்து, சேப்பாக்கம் மைதானத்தை கடந்து சென்ற இந்த பேரணி  காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது.

இதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேரணியாக வந்த மூத்த அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow