சென்னை அண்ணாசாலை தர்கா பின்புறம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சிலர் சுற்றுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது 12 கிராம் மெத்தபெட்டமைன், 27 போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கைதானவர்கள் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மகேஷ், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாரூக் என்பது தெரியவந்தது. இதில் மகேஷின் தந்தை ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் பிபிஏ (BBA) பட்டதாரி என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், மற்றொரு நபரான பாரூக் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் அண்ணாநகர் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இருவரும் போர்டர் (Porter) செயலி மற்றும் ஸ்விக்கி (swiggy) செயலி மூலம் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளனர்.
அதாவது, போதைப்பொருளை விற்பனை செய்யும் முதாசீர் என்பவர் ஆப் மூலம் போதைப்பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களை பிடித்து அவர்களுக்கு போதைப்பொருட்களை கைதான இருவரின் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார்.
முதாசீர் கஸ்டமர் கிடைத்தவுடன் வாட்ஸ் அப் காலில் மகேஷ், பாரூக் இருவரையும் அழைத்து யாருக்கு போதைப்பொருளை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிடுவார். ஒரு டெலிவரிக்கு 500 ரூபாய் கமிஷன் என்ற அடிப்படையில் இருவரும் இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் போதைப்பொருளுக்கான பணத்தை நேரடியாக முதாசீருக்கு அனுப்பி விடுவதாக கைதான 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது தலைமறைவாகியுள்ள முதாசீரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.