தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை
வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட மகப்பேறு நல மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ பிரிவின் முதல் தளத்தில் கர்ப்பிணி பெண்கள் பகுதி, இரண்டாவது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பகுதி, மூன்றாவது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் (குடும்ப கட்டுப்பாடு) அறுவை சிகிச்சை பகுதி, நான்காவது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி உள்ளது.
ஐந்தாவது தளத்தில் பிரசவத்துக்கு பின்னர் பெண்களுக்கான பராமரிப்பு பகுதி ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 10க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் இயங்கிவரும் ஐந்து பிரிவுகளிலும் சேர்த்து சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஐந்தாவது தளத்தில் செயல்பட்டு வரும் பிரசவத்துக்கு பின்னர் பெண்களுக்கான பராமரிப்பு வார்டில், பிரசவம் ஆன தாய்மார்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் என மொத்தம் 96 பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வருவதால், சுமார் 50 பெண்களுக்கு மேல் படுக்கைகள் இல்லை எனக் கூறி சுமார் ஏழு நாட்களுக்கு மேலாக பச்சிளம் குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்களை, பச்சிளம் குழந்தைகளுடன் கீழே படுக்க வைத்திருக்கக்கூடிய நிலை அரங்கேறியது.
இது குறித்து குமுதம் செய்தியில் பிரத்தியேகமாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு படுக்கைகள் இல்லாத நிலை குறித்து செய்தி வெளியிடப்பட்டது. குமுதம் செய்தியில் எதிரொலியாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) எழிலரசன் அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு நலப்பிரிவு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கீழே உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகளையும் தாய்மார்களையும் கண்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ. எழிலரசன், மருத்துவர்களிடம் எப்படி இவர்களை கீழே படுக்க வைக்கலாம் என கேள்வி எழுப்பி மருத்துவர்களை கண்டித்தார். உடனே, மகப்பேறு நலப்பிரிவின் இரண்டாவது தளத்தில், விபத்தில் அடிபட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் வார்டில் உள்ள பெண்கள், பழைய பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
உடனே தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களை மகப்பேறு நலப்பிரிவு உள்ள இரண்டாவது தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், குழந்தைகளையும், தாய்மார்களையும் படுக்கையில் அமர வைத்த எம்.எல்.ஏ. எழிலரசன், நோயாளிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதாக உறுதி தெரிவித்தார்.
What's Your Reaction?