தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் வருகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்

குடியரசுத் தலைவர் வருகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு!
குடியரசுத் தலைவர் வருகை.. ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து இன்று விமானம் மூலம் காலை 9.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் வரவேற்றனர். கடுமையான பனிபொழிவு ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் உதகை சென்றார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூன்று நாட்கள் உதகையில் உள்ள ராஜ்பவன் இல்லத்தில் தங்குகிறார். அங்கிருந்து, குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
 பங்கேற்கிறார். தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றுகிறார். 

முன்னதாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் முன்பு அமைந்துள்ள போர் நினைவு தூணில், இந்திய போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்துகிறார்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்தித்து பேசுகிறார்.

 நீலகிரி பயணத்தை முடித்துகொண்டு, வரும் 30 ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும்  9-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

குடியரசு தலைவரின் நான்கு நாள் தமிழக பயணத்தை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு நீலகிர் மாவட்டம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  தொடர்ந்து உதகையில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சிறு சிறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.