தமிழ்நாடு

”ஆம்ஸ்ட்ராங் அழைத்து எச்சரித்தேன்..” – வெளியான தாதா நாகேந்திரன் வாக்குமூலம்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

”ஆம்ஸ்ட்ராங் அழைத்து எச்சரித்தேன்..” – வெளியான தாதா நாகேந்திரன் வாக்குமூலம்!

கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீடு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து செம்பியம் போலீசார் 28 பேரை கைது செய்தனர். அதில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ரவுடி சம்போ செந்தில் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளனர். 

கொலை வழக்கு குறித்து 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்டுள்ள குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியாகியுள்ளது. 

அந்த வாக்குமூலத்தில், “ஆர்ம்ஸ்ட்ராங் கொலை திட்டம் குறித்து வழக்கறிஞர் அருள் கூறியதாக எனது மகன் அஸ்வத்தாமன் என்னிடம் கூறினார். குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது எனது மகன் சந்தித்து கூறினார். ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம். ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயபிரகாஷை துப்பாக்கியை காட்டி அஸ்வத்தம்மன் மிரட்டிய விவகாரத்தில் கைது செய்ய ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம், என்பதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது” என்று தாதா நாகேந்திரன் கூறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல். 

மேலும், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளரை அழைத்து எனது மகனுக்கு எதாவது ஆச்சுனா நான் எந்த லெவலுக்கும் போவேன் என்றும், தனது மகன் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வராமல் இருக்க ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம் என்றும் நாகேந்திரன் தெரிவித்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.