தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து... உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தர்ராஜன், எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில், கண்டமிதில் (கண்டம் + இதில்) என்பதை, கண்டமதில் (கண்டம் + அதில்) என்றும், புகழ் மணக்க என்பதை (திகழ் மணக்க) என்றும் தவறாக பாடினர். அதேபோல், “திராவிட நல் திருநாடும் என்ற வரியில்... 'திருநாடும்...' என்ற வார்த்தை சரியாக ஒலிக்காமல் இடைவெளி ஏற்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுடனும் தடுமாற்றத்துடனும் பாடப்பட்டதை கவனித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீண்டும் பாட அறிவுறுத்தினார். இரண்டாவது முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய போதும் அதே தவறு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் கொடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை, இதனால் தான் அவர்களது குரல்கள் சரியாக கேட்கவில்லை, எனவே மீண்டும் சரியாக பாட வைத்தோம். தேவையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவது முறை பாடியபோது அதில் தவறு நடந்ததை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். திமுகவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்பற்றி கவலை இல்லை, அரசியல் செய்வது மட்டுமே அவர்களின் எண்ணம். திமுக அரசில் தமிழ்தாய் வாழ்த்தை சரியாக பாட வைக்க முடியாத நிலையில்தான் இவர்களின் ஆட்சி இருக்கிறது என்பதே வேதனை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் பெரும்பாலான இடங்களில் நடக்கும் தவறுகளை இந்த அரசு ஆராய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதேபோல், மத்திய அமைச்சர் எல் முருகனும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்..? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் முதலில் இருந்து பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறையும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித்தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே; அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்துவிடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும்; தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்கமாட்டார்களா?
இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்” என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும். ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக பிரமுகரும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசனும் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், நீங்கள் துணை முதலமைச்சரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா என உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீங்கள் பங்கேற்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக் கூட உறுதிசெய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? இதுதான் நீங்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காக்கும் லட்சணமா?
தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும் போது, செய்த தவறை மறைக்க “Technical Fault” என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்? ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக ஆளுநரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.
என்ன பதில் சொல்லப்போகிறார் முதலமைச்சர் @mkstalin..?
பதவி விலகுவாரா @Udhaystalin..?
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… — Dr.L.Murugan (@Murugan_MoS) October 25, 2024
What's Your Reaction?