டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை..!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ள மத்திய அரசு, சுரங்கம் அமையும் பகுதிகளை மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்ஐ-க்கு பரிந்துரை செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டம் மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி ஆகிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான, புவியியல் குறிப்பாணையை கடந்த 2021 செப்., 14ல் தமிழக அரசிடம், இந்திய புவியியல் சர்வே(ஜிஎஸ்ஐ) அமைப்பு வழங்கியது. அந்த நேரத்தில், டங்ஸ்டன் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடம் தான் இருந்தது.
பிறகு, மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தின்படி சுரங்க குத்தகைகள் மற்றும் ஏலத்திற்கு விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. மத்திய சுரங்கத்துறை அமைச்சகம், கடந்த 2023 செப்டம்பர்15 ஆம் தேதி, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான தனிமங்கள் ஏலம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இதற்கு 2023 அக்டோபர் 3 ஆம் தேதி பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்டத்திருத்தம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, முக்கியமான தனிமங்கள் ஏலத்தில் விடுவதற்கான உரிமை தமிழக அரசிடமே இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
மத்திய அரசு அறிவிப்பால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு கட்டப் போராட்டங்களை மதுரை மக்கள் முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
What's Your Reaction?