“மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..” டென்ஷனான உதயநிதி... வைரலாகும் வீடியோ!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த ஊழியர்கள் 3 பேர் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர். அப்போது கண்டமிதில் (கண்டம் + இதில்) என்பதை, கண்டமதில் (கண்டம் + அதில்) என்றும், புகழ் மணக்க என்பதை (திகழ் மணக்க) என்றும் தவறாக பாடினர். சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற நிகழ்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், “'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வார்த்தை விடப்பட்டது சர்ச்சையானது.
இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மைக் சரியாக வேலை செய்யாததால், “திராவிட நல் திருநாடும் என்ற வரியில்... 'திருநாடும்...' என்ற வார்த்தை சரியாக ஒலிக்காமல் இடைவெளி ஏற்பட்டது. இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் தடுமாற்றத்துடனும் பாடப்பட்டதை கவனித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிழையின்றி மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாட அறிவுறுத்தினார்.
இதனையடுத்து இரண்டாவது முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர்கள், மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இரண்டாவது முறை மைக் தெளிவாக இயங்கியதால் பிழைகள் அனைத்தும் முழுமையாகத் தெரிந்தன. இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய ஊழியர்களை முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில், 19 பேர் நிறைவுசெய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும் அவர்கள் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் கூறினார். இதனால் தான் அவர்களது குரல்கள் சரியாக கேட்கவில்லை, எனவே மீண்டும் சரியாக பாட வைத்தோம், நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். முக்கியமாக தேவையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தபடி அங்கிருந்துச் சென்றார்.
What's Your Reaction?