TVK Vijay: பெரியார், அம்பேத்கர் நடுவே விஜய் கட் அவுட்... தவெக மாநாட்டில் இதுதான் சம்பவமே!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, அதிலிருந்து விலகி அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார் தளபதி விஜய். அதன்படி, 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம், தற்போது தமிழக வெற்றிக் கழகமாக மாறியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அறிவித்த விஜய், தற்போது அதன் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள தவெக, அதில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மேடை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் விஜய்யின் அரசியல் கொள்கை, சித்தாந்தம் எது என்பது தான் மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற டேக் லைன் மட்டுமே இதுவரை, தவெக அறிக்கைகளில் தவறாமல் இடம்பிடித்து வருகிறது. ஆனாலும், கட்சியின் கொள்கை பற்றியும், தவெக கொடி குறித்தும் இதுவரை விஜய் விளக்கம் கொடுக்கவே இல்லை. இதற்காக தற்போதைய தவெக மாநாடு என சொல்லப்படுகிறது.
அதாவது வரும் 27ம் தேதி நடைபெறும் தவெக மாநாட்டில், கட்சியின் கொள்கை உட்பட கொடி குறித்தும் விளக்கம் கொடுக்கவுள்ளாராம் விஜய். இந்நிலையில், தவெக மாநாட்டு திடலில் விஜய்க்கு சுமார் 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹைலைட்டான விஷயமே விஜய்யின் கட்-அவுட் அருகே பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோருக்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் – அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய்க்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து முக்கியமான லீட் கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர முடியவில்லை. முக்கியமாக திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட பல கட்சிகளும், பெரியளவில் மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை. இதனால் விஜய்யின் சித்தாந்தம், கொள்கை என்னவென்று பொதுமக்களிடம் கேள்விகள் எழுந்தன. இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் சுவடை தொடாமல் தேர்தலை சந்திப்பது ரொம்பவே சவாலான விஷயம்.
இதனால், பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தவெக மாநாட்டுத் திடலில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக பெரியாரின் பிறந்தநாள் தினத்தில், அவரது நினைவிடத்துக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அப்போதே விஜய்யின் அரசியல் சித்தாந்தமும் கொள்கையும் பெரியாரின் வழியில் தான் இருக்கும் என சொல்லப்பட்டது. இது பாஜகவுக்கு கொஞ்சம் ஷாக்கிங்காக இருந்தாலும், மாநாட்டுக்காகவும், அங்கு விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்கவும் பொறுமையாக இருந்தது.
ஆனால், இப்போது தவெக மாநாட்டுத் திடலில், அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ் வரலாற்று ஆளுமைகளுக்கும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் வாசகத்தின் உருவக கட் அவுட், விடுதலை போராட்ட வீராங்கனைகள் அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோருக்கும் தவெக மாநாட்டுத் திடலில் கட் அவுட் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே விஜய்க்கும் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், பெரியார், அம்பேத்கர் வரிசையில் வருவதற்கு விஜய் இன்னும் நீண்ட நெடிய பயணத்துக்கு ரெடியாக வேண்டும். ஆனால், விஜய்யோ அப்பெருந்தலைவர்களில் தானும் ஒருவன் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
What's Your Reaction?