1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

Aug 8, 2024 - 09:53
Aug 8, 2024 - 10:05
 0
1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை
1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குருவை நெல் சாகுபடியின்,  அறுவடைப்பணியை  விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, அரசு ஏற்பாடு செய்துகொடுத்துள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திறக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஏற்படுத்தியுள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், அவசரக் கதியில் திறக்கப்பட்டுள்ளதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் அடுத்துள்ள ஆலிச்சிகுடி கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சுமார் 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) பெய்த கனமழையினால், நேரடி நெல்  கொள்முதல் நிலையம் முழுவதும் சேரும் சகதியமாக மாறியது. இதனால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல், விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதடைந்தது. 

சுமார் 1000 நெல் மூட்டைகள் அளவிற்கு மழையில் நனைந்து சேதம் அடைந்திருப்பதாகவும், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால், மழையில் நனைந்த நெல்மணிகள், முளைப்புத் தன்மை ஏற்பட்டு வீணாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரக் கதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதாகவும், சமதளமான களத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல், விவசாய நிலத்தில் திறந்ததால், கொள்முதல் நிலையம் முழுவதும் சேரும், சகதியமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக, தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க: ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சில விவசாயிகள், “ஒவ்வொரு நெல்மணிகளையும் வியர்வை சிந்தி ரொம்ப கஷ்டப்பட்டு விளையவைக்குறோம். ஆனால் அதுக்கு பலன் இல்லாமல் போகும்போதுதான் வேதனையா இருக்கு. நெல் மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமலும்,  அடிப்படை வசதிகள் இல்லாமலும், அவசரக் கதியில்  திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்டறிந்து தமிழ்நாடு அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும். விவசாயிகளின் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும். நாங்க கொண்டு வருகிற நெல் மூட்டைகளையும் கிடப்பில் போடாமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow