ஆன்மிகம்

ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது

ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல் என்று அனைத்து அம்மன் கோயில்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில்  அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 

பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில்தான். எனவேதான் இம்மாதம் அத்தனை சிறப்புகளை பெற்றிருக்கிறது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய்,  வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல மனவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. மேலும் வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிபட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் காற்றும் மழையும் அதிகளவில் இருக்கும். காற்றை காளியும் மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துவதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த மாதங்களில் கூழ் வார்த்து வழிபடுவது வழக்கம். 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ விருதாம்பிகை, பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. காசிக்கு நிகராக இக்கோயில் மகிமை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர் மற்றும் முதுகுந்தர் என்ற மற்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். 

மேலும் படிக்க: காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு; குழந்தை பாக்கியம் கிட்டும்

இந்நிலையில் ஆடிப்பூரம் திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மன் வீதி உலா, திருதேரோட்டம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ஆடிபுர திருக்கல்யாண மகாஉற்சவம் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. பட்டுப் புடவை உடுத்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விருத்தாம்பிகை அம்பாளுக்கும், விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கும், மேளதாளத்துடன், மலர்கள் தூவி திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடிப்பூர திருக்கல்யாணம் முடிந்ததும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.