ஆடிப்பூரத்தில் காளியம்மனுக்கு வளைகாப்பு; குழந்தை பாக்கியம் கிட்டும்

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.

Aug 8, 2024 - 08:45
Aug 8, 2024 - 10:09
 0
ஆடிப்பூரத்தில் காளியம்மனுக்கு வளைகாப்பு; குழந்தை பாக்கியம் கிட்டும்
காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்

அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல் என்று அனைத்து அம்மன் கோயில்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில்  அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 

பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில்தான். எனவேதான் இம்மாதம் அத்தனை சிறப்புகளை பெற்றிருக்கிறது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய்,  வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல மனவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. மேலும் வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிபட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் காற்றும் மழையும் அதிகளவில் இருக்கும். காற்றை காளியும் மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துவதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த மாதங்களில் கூழ் வார்த்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த நெம்மேலிக்காடு கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு இக்கோயிலில் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு வளைகாப்பு சாத்தும் நிகழ்ச்சியை நடத்தினர். 

இதற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து காளி மற்றும் கருப்பர் வேடம் அணிந்து பெண்கள் கும்மியடித்தனர். இதையடுத்து கும்மியடித்தவாறே வளையல், பூ, பட்டு சேலை, மஞ்சள் மற்றும் குங்குமம் உள்ளிட்டவற்றை சீர் வரிசையாக தலையில் ஏந்தியவாறு ஒரு கிலோ மீட்டர் தூரம் ஆட்டம் பாட்டத்துடன் எடுத்து வந்தனர். பின்னர் சீர் வரிசையாக கொண்டு வந்த வளையலை அம்மன் கழுத்தில் மாலையாகவும் கையில் காப்பாகவும் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 08 - நாக சதுர்த்தி நாளில் நல்லது நடக்குமா?

திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமண பாக்கியமும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும், நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் இந்த வளைகாப்பு நிகழ்வை நடத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வை சுற்றுவட்டார பகுதியில் இருந்து காண வந்த ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மூழ்கினர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow