பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

Jul 8, 2024 - 23:38
 0
பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்
இறந்தவரின் உடலை சுமந்துசென்ற பெண்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இறுதி ஊர்வலத்தில் பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு நிகழ்த்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

21ஆம் நூற்றாண்டில் பெண்கள் புரிந்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதது. வாண்வெளி முதல் விண்மண்டலங்கள் வரை, விவசாயம் முதல் வானூர்தி இயக்குவதை பெண்கள் நவீன யுகத்தில் தங்களது தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறி வருகின்றனர்.

ஆனாலும், நம் நாட்டில் சில பழக்க வழக்கங்களாலும், மூட நம்பிக்கைகளாலும் பெண்கள் சமுதாயம் கட்டுண்டு கிடக்கிறது. விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

அப்படி ஒன்றுதான் இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்குகளிலும் பெண்கள் பங்கேற்பது குறித்ததாகும். எப்பொழுதும் இறுதி ஊர்வலத்தில் பெண்கள் வீதியிலேயே நிறுத்தப்படுவார்கள். அதேபோல் ஈமச்சடங்குகள் செய்வதிலும் பெண்களுக்கு இன்றுவரை கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

இதனை தகர்க்கும் விதமாகவும் பெரியார் செய்த புரட்சியால் பெண்கள் தங்கள் எல்லைகளை கடந்து சாதனை புரிந்து வருகின்றனர். சில முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரி அமைப்புகளும் பழமைவாதத்தை தகர்த்தெறிந்து பெண்களை எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்க செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, கொளத்தூர் அய்யம்புதூர் பகுதியைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி சி.சுப்பிரமணியன் காலமானார். இதையடுத்து திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் மறைந்த சுப்பிரமணியனின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர்.

அதேபோல, சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது உக்கம்பருத்திக்காடு கிராமத்தை சார்ந்த செல்லமுத்து என்பவர் உயிரிழந்தார். வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து, இதற்கு மாறாக செல்லமுத்துவின் இறுதி ஊர்வலத்தை அந்த கிராமத்தைச் சார்ந்த பெண்களே தலைமையேற்று நடத்தினர். மேலும், இறுதி வணக்கம் செலுத்தி, பெண்களே உடலை தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.

இந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி (83) என்பவர் கடந்த 5ம் தேதி உடல்நலம் குன்றி உயிரிழந்தார். இவரது உடலை பெண்கள் மட்டும் சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டது.

தாராபுரம் மின் மயானத்தில் எவ்வித ஜாதி மத சடங்குகளும் இன்றி பெண்களே இந்திராணி உடலை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டது. திராவிடர் கழக பெரியாரிய உணர்வாளர்கள் இணைந்து இந்த புரட்சிகர இறுதி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow