சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரில், அதுவும் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பிறகு அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ், மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை என அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஹரிஹரன், ஹரிதரன், அஸ்வத்தாமன், சிவா என வழக்கறிஞர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மேற்கண்ட 4 வழக்கறிஞர்களும் வழக்கு முடியும்வரை வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.