ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Jul 7, 2024 - 15:19
Jul 8, 2024 - 12:41
 0
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் - மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்
BSP Chief Armstrong Body Buried at Pothur in Chennai

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் செம்பியம் காவல் நிலையம் அருகே நடந்த இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை காணொளி வாயிலாக நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதேபோல் ஆம்ஸ்ட்ராங் உடலையும் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்க செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.

இதற்கு பதில் அளித்த அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தேமுதிக அலுவலகம் 27,000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடத்தில் அமைந்துள்ளது. இதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. இடம் வழங்க எங்களுக்கு மனம் இருந்தாலும் சட்டவிதிகளில் இடம் இல்லை'' என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், ''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. 

வீர வணக்கம் போன்ற நிகழ்வின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்ய முடியும்? போதுமான இடம் இல்லாமல் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. ஆகவே அரசு ஒதுக்கும் இடத்தில் உடலை அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

பின்பு 12 மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''அரசு 200 சதுர அடிநிலம் ஒதுக்க தயாராக உள்ளது. திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு மணிமண்டபம் அமைக்கலாம்'' என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பெரம்பூரில் உறவினருக்கு சொந்தமான 7,500 சதுர அடி நிலம் உள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்றார். 

நிலம் தொடர்பான வரைபடத்தைப் பெற்று பார்வையிட்ட நீதிபதி, ''குடியிருப்பு பகுதிகள் என்பதால் இந்த இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் கருத்து கேட்க வேண்டியதுள்ளது. இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, புதிய இடத்தில் அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம். 

குடும்ப உறுப்பினர் நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். அரசு அனுமதி பெற வேண்டும். அதுவரை உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும்.  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உடல் முன் அமர்ந்து எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பின்பு இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், உடலை பள்ளி மைதானத்தில் இருந்து இன்றே எடுத்தாக வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி பவானி சுப்பராயன், உடல் எடுத்துச் செல்லப்படும் 20 கி.மீ. தூரத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

உடலை அமைதியான முறையில் அடக்கம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்திய நீதிபதி, ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவிடம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசை அணுகி உரிய அனுமதிகளை பெற வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow