சைபர் மோசடிக்காக தமிழர்கள் கம்போடியோவிற்கு கடத்தல் - சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்குகள்
சைபர் மோசடி செயலுக்காக கம்போடியோவிற்கு தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சமீப காலங்களில் இந்தியாவில் இருந்து 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள். கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு இலாபகரமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து ஈர்க்கப்படுகிறார்கள்.
அவர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவோ வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த இளைஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் அல்லது அதுபோன்ற பதவிகள் போன்ற முறையான வேலை வாய்ப்புகளை சாக்காக வைத்து பணியமர்த்தப்படுகிறார்கள்.
இருப்பினும், அங்கு சென்றவுடன் அவர்கள் இணைய அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டு, போலியான சமூக ஊடக சுயவிவரங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுதல், FedEx மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களை ஏமாற்றுவதற்கான மோசடித் திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் பங்கேற்க வைக்கப்படுகிறார்கள்.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இந்த இணைய அடிமைத்தனம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், இந்த முறைகேடுகள் குறித்த முழுமையான விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரை (Protector of Emigrants) அணுகுவதன் மூலம் வேலையின் தன்மை மற்றும் முகவரின் சுயவிவரத்தை முழுமையாக சரிபார்க்கவும்.
வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்ப, பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
ஒருவர் வேலைவாய்ப்பு அல்லது பணி விசாவில் மட்டுமே பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டும். சுற்றுலா விசாவை சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்த்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு சைபர் கிரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார், “இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 48 சதவீதம் பேர் 34 வயதுக்கு குறைவாக உள்ளனர். 43 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையை நடத்த முடியாத சூழல் ஏற்படும். இத்தகைய சூழலில் அவர்களை கவர்ந்து சைபர் குற்றம் செய்ய பயன்படுத்துவார்கள். சைபர் குற்றம் மட்டுமின்றி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.
வாழ்க்கையை நடத்த கம்போடியா நாட்டிற்கு சென்ற இந்தியர்கள் சைபர் தளத்தில் பணம் பறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய செய்திகளின் படி நடைபெறுகின்ற சைபர் குற்றத்தில் 46 சதவீத சைபர் குற்றவாளிகள் கம்போடியா நாட்டில் உருவாகின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துள்ளது. அதே வேகத்தில் தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு வளரவில்லை. ஆகையால் தான் பிரச்சனைகள் உருவாகின்றது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?