ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதான 8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்... அடுத்தது என்ன?... போலீசார் விளக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துதான் குற்றவாளிகளை பிடித்துள்ளோம்''

Jul 7, 2024 - 13:44
 0
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதான 8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்... அடுத்தது என்ன?... போலீசார் விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் இரவு அயனாவரத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த, காவல் நிலையம் அருகே உள்ள பகுதியில் சர்வசாதாரணமாக கொலை நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக அருள் (33), செல்வராஜ் (48), மணிவண்ணன் (25), திருமலா (45), பொன்னை பாலு (39), ராமு (38), சந்தோஷ் (32), திருவேங்கடம் (33), ஆகிய 8 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர். 

பின்பு கோகுல், விஜய், சிவசக்தி என மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக முதலில் கைதான 8 பேரையும் போலீசார் உடனடியாக புழல் சிறையில் கொண்டு அடைத்தனர்.

பின்பு கைதான 8 பேரையும் எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர்கள் 8 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.  கடந்த ஆண்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்க்கு தொடர்பு இருப்பதாக ஆற்காடு சுரேஷின் உறவினர்கள், நண்பர்கள் கருதினார்கள். அதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்டவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதை மறுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை, 'இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைதான் கைது செய்துள்ளோம்' என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆஸ்ரா கர்க் கூறுகையில், ''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துதான் குற்றவாளிகளை பிடித்துள்ளோம்.

அவர்களிடம் இருந்து உணவு டெலிவரி ஆடை, 3 பைக்குகள் மற்றும் ரத்தக்கரையுடன் 7 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு மேலும் 3 பேரை கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே  ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். கைது செய்யப்பட்டவர்கள் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அல்ல. முதற்கட்ட விசாரணையில்  இந்த கொலைக்கு அரசியல் காரணமில்லை என்பது தெரியவந்துள்ளது'' என்று ஆஸ்ரா கர்க் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow