தமிழ்நாடு

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!
Rain In Tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''நேற்று (07.09.2024) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, இன்று (08.09.2024) காலை 5:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திரா) கிழக்கே 280 கி.மீ, கோபால்பூற்கு (ஓடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா - மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 9ம் தேதி மாலை/இரவு வாக்கில் ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை  பூரி (ஓடிசா) – தீகா (மேற்கு வங்காளம்)  இடையே கடக்க கூடும்.

09.09.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

10.09.2024 முதல் 14.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிக்ரீ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மன்னார்   வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  இதேபோல் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.