பிரபல நடிகையின் கார் மோதி முதியவர் பலி.. ஓட்டுநரை கைது செய்த போலீஸார்..
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த மஞ்சன் (55) என்பவர் மது போதையில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்து கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று முதியவர் மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது முதியவர் மஞ்சனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் எண்ணை வைத்து கார் ஓட்டுநர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி (25) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாண்டி அடையாறில் உள்ள நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில்தான் இந்த கார் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
நடிகை ரேகா நாயர் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், நாயகர், வம்சம், பகல் நிலவு, பால கணபதி, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






