உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்

மாநில உளவுத்துறை காவலரை தாக்கியதாக சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர், உதவி ஆய்வாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு காவலர்கள் சேர்ந்து உளவுத்துறை காவலரை சரமாரி தாக்கியதில் கால் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Feb 24, 2025 - 11:54
 0
உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்
உளவுத்துறை காவலரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு காவலர்கள்.. போலீசில் புகார்

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன். இவர் மாநில உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பாலசுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தில் சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வடமாநில இளைஞர்கள் இருவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். 

மேலும் அந்த நபர்கள் காவலர் பாலசுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தை உரசி செல்வது போல் சென்றதால் அவர்களை விரட்டி சென்று தடுத்து நிறுத்தி எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என பாலசுப்பிரமணியன் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது அங்கு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்த நுண்ணறிவு பிரிவு காவலர் மகாராஜன் விரைந்து சென்று வடமாநில வாலிபர்களுக்கு ஆதரவாக காவலர் பாலசுப்பிரமணியனிடம் தகராறில் ஈடுபட்டதுடன் நீ யார் என கேட்டுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியன் நான் உளவுத்துறை காவலர் என கூறிய உடன்  அடையாள அட்டை கேட்ட மகாராஜன் நானும் நுண்ணறிவு பிரிவு காவலர் தான் என் தெரிவித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப், காவலர் பாலசுப்பிரமணியனிடம் சண்டையிட்டு அவரை பிடித்து கீழே தள்ளி எட்டி உதைத்தால் நிலைதடுமாறி அருகில் இருந்த இருசக்கர வாகனம் மீது பாலசுப்பிரமணியன் விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் தனது நண்பரை வரவழைத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உளவுத்துறை தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் இது குறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் நுண்ணறிவு பிரிவு காவலர் மகாராஜன்  மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow