Chennai Rain: சென்னைக்கு ரெட் அலர்ட் இல்லை... ஆனாலும் மக்களே உஷார்... இன்றைய மழை அப்டேட்!
சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை நேற்றுத் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே மழை ருத்ரதாண்டவம் ஆடியது. நேற்று முன்தினம் இரவில் இருந்து மெல்ல மெல்ல வேகம் பிடிக்கத் தொடங்கிய மழை, நேற்று முழுவதும் விடாமல் அடித்து நொறுக்கியது. இதனால் சென்னை உட்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. சென்னையின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது, அதேபோல் மழை நீர் தேங்கியதாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும் நல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பு வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே தேங்கி இருந்த மழைநீர் வடிய தொடங்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் தத்தளித்த தலைநகர் சென்னை, தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு வருகிறது. முன்னதாக கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அத்தியாவசிய தேவைக்கு கூட பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உருவானது.
இதையடுத்து மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதன் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கி இயல்பு நிலை திரும்பி வருகிறது. பாரிமுனையில் இருந்து மண்ணடி புளியந்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதுமாக வெளியேறியுள்ளது. இதனிடையே சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ஆனால், சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 30 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது எனவும் 18 முதல் 20 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம் எனவும், வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
What's Your Reaction?