ராணிப்பேட்டை பகுதி கிடங்கு தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார்-சாந்தி அவர்களின் மூத்த மகன் அருண்பிரகாஷ் வயது (35). அதே பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பெங்களூரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அஸ்வினி (31) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக அருண்பிரகாஷ் தனது மனைவியுடன் இணைந்து சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண்பிரகாஷின் மனைவி அஸ்வினி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கருவுற்று 4 மாத கர்ப்பிணியான நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 13-ஆம் தேதி அன்று வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது மனைவிக்கு சுகர் அதிகமாக இருக்கிறது, இதனால் மருத்துவமனையிலேயே அட்மிட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய சிகிச்சை அளிக்க வெளியில் இருந்து மருந்து வாங்கிக்கொண்டு வரும்படி அருண் பிரகாஷிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் காலை யாரிடமாவது பணம் பெற்று கொண்டு மாத்திரைகளை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை:
இந்நிலையில் அடுத்த நாள் காலை வெகு நேரமாகியும் அவர் பூஜைகள் மேற்கொள்ள கோயிலுக்கும் செல்லாமல் மனைவியை பார்க்க மருத்துவமனைக்கும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழிட்ட நிலையில் இருந்ததாகவும், நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் மின்விசிறியின் கொக்கியில் தூக்கிட்ட நிலையில் அருண் பிரகாஷ் சடலமாக கிடந்தார்.
இதனை அடுத்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கியதாலும், உடல் நல குறைவு ஏற்பட்ட கர்ப்பிணி மனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க முடியாத காரணத்தினாலும் மனமுடைந்த கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சொத்துக்காக உயிருடன் உள்ளவருக்கு இறப்புச்சான்று: விஏஓ உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு