திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் ஜானகி என்ற லட்சுமியம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு தனது தாயின் பெயரில் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்ற விக்னேஷ் தனது தந்தை பெயரில் இருந்த நிலத்தை பட்டா மாற்றம் செய்துள்ளார்.
அண்மையில் ஊருக்கு திரும்பிய ஜானகி தனது கணவர் பெயரில் இருந்த நிலத்தை பட்டா மாற்றம் செய்ததை அறிந்துள்ளார். இதனை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற ஜானகி தான் உயிருடன் இருக்கும் போதே தனது பெயரில் இறப்பு சான்று, வாரிசு சான்று பெற்று பட்டா மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட ஜானகியின் மகன் விக்னேஷ் அளித்த மனுவின் பேரில் அப்போதைய ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா முறையான விசாரணை நடத்தாமல் தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. இதனையடுத்து உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய விஏஓ ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் விஏஓ ராஜா, மனுதாரர் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருடன் உள்ள பெண்ணிற்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய விஏஓ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!