ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!
ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். பெரம்பூர் அயனாவரம் பகுதியை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த மர்ம கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த படுகொலையால் சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது மருத்துவமனை வெளியே திரண்ட பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், ''ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அவரது ஆதரவாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததால் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்பு நேற்று இரவு அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடல் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதற்கிடையே , ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
அதன்படி இந்த வழக்கு இன்று காலை 8.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவனி சுப்புராயன் வழக்கை விசாரித்து, ஆம்ஸ்ட்ராங் உடலை எந்த இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்? என்பது குறித்து முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று காலை சென்னை வர உள்ளார். மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வருகை தர உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?