லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டு உள்ளார்.

Mar 20, 2025 - 10:41
Mar 20, 2025 - 11:09
 0
லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!
லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!

கோவை, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி விவசாயி. இவர் வாரிசு சான்றிதழ் கோரி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இது தொடர்பாக அவர் மத்வராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை சந்தித்து வாரிசு சான்றிதழ் குறித்து கேட்டு அறிந்தார். அப்பொழுது கிராம நிர்வாக அதிகாரி ரூபாய் 5,000 பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்றிதழ் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார்:

இதையடுத்து கிருஷ்ணசாமி தனது உறவினர் மூலம் முதற்கட்டமாக ரூபாய் ஆயிரம் கொடுத்தார். மீதித் தொகையை பின்னர் தருவதாக தெரிவித்தார். இதனிடையே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டது தொடர்பாக விவசாயி கிருஷ்ணசாமி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா, ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வழங்கினார். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேல், விவசாயி கிருஷ்ணசாமியிடம் தான் புட்டுவிக்கி சாலையில் நிற்பதாகவும் அங்கே வந்து பணத்தை தரும்படி கூறி உள்ளார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணசாமி, அவரிடம் லஞ்சம் பணம் ரூபாய் 3,500-யை வழங்கினார்.

குளத்தில் குதித்த அதிகாரி:

அப்பொழுது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரியை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய வெற்றிவேல் அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார். இதை அடுத்து காவல் துறையினர் அவரை வாகனத்தில் துரத்திச் சென்றனர். பின்னர் அவர் காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி விட்டு லஞ்சப் பணத்துடன் பேரூர் குளத்தில் குதித்தார். காவல் துறையினர் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். 

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டு உள்ளார்.

Read more: பிரதமரே அதிர வைத்த சம்பவம்: 24 தலித்துகள் சுட்டுக்கொலை.. 44 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow