பிரதமரே அதிர வைத்த சம்பவம்: 24 தலித்துகள் சுட்டுக்கொலை.. 44 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு
நவம்பர் 18, 1981 அன்று, காக்கி உடை அணிந்த 17 பேர் தெஹுலி கிராமத்திற்குள் நுழைந்து 24 தலித்துகளை சுட்டுக் கொன்ற சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு ஏழு பெண்கள் மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட 24 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைகள் நடந்து கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் கடந்து இந்த தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை சம்பவம் அன்றைய காலத்தில் இந்தியா முழுக்க பேசுப்பொருளாகியது. தலித்துக்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்க, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் பதவி விலகக்கூட முன்வந்த வரலாறு இந்த வழக்குக்கு உண்டு. சாதி ரீதியிலான படுகொலை சம்பவம் நிகழக் காரணம் என்ன? இந்த சம்பவத்தினால் அரசியல் வட்டாரங்கள் கதிகலங்கிய விதம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சாதி மோதல் தொடங்கியது எதனால்?
தலித் இனத்தைச் சேர்ந்த கொள்ளையன் குன்வர் பால், சந்தோஷ் மற்றும் ராதே ஷியாம் ஆகியோருடன் ஒரே கொள்ளை கும்பலில் இருந்தார். குன்வர் பால் குறிப்பிட்ட சாதிப் பெண்ணுடன் நட்பு கொண்டிருந்தார், இது சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. இங்குதான் சாதி மோதல் தொடங்கியது. இதன் பிறகு, குன்வர் பால் சந்தேகத்திற்கிடமான நிலையில் கொலை செய்யப்பட்டார், இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் சந்தோஷ் மற்றும் ராதே கும்பல் தான் என பேச்சு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார் சந்தோஷ்-ராதே கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, ஏராளமான ஆயுதங்களை மீட்டனர்.
சந்தோஷ், ராதே மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் கும்பலைச் சேர்ந்த இருவரையும் கைது செய்ததன் பின்னணியில் தெஹுலி கிராமத்தை சேர்ந்த தலித்துகள் இருப்பதாக சந்தேகித்தனர். இந்த சம்பவத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சாட்சிகளாகக் கொண்டு வந்தபோது, இந்த சந்தேகம் மேலும் அதிகரித்தது. காவல்துறை மேற்கொண்ட குற்றப்பத்திரிகை, வரலாற்றின் சுவடுகளில் அழிக்கமுடியாத படுகொலை சம்பவத்திற்கு வித்திட்டது.
உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தேஹுலி கிராமத்தில் (இப்போது ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ளது) நவம்பர் 18, 1981 அன்று உயர் சாதியை சேர்ந்த கும்பல் துப்பாக்கி ஏந்திய கிராமத்திற்குள் நுழைந்தது. கண்மூடித்தனமாக 24 தலித்துகளை சுட்டுக்கொன்று படுகொலை செய்தது.
மரண தண்டனை விதிப்பு:
முதல் எஃப்.ஐ.ஆரில் 17 பேர் மீது ஐபிசி பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி) மற்றும் 396 (கொலையுடன் கூடிய கொள்ளை) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்த குற்றம் சாட்டப்பட்டவர்களில், 13 பேர் விசாரணை நிலுவையில் இருந்தபோது இறந்தனர், ஒருவர் தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
கொடூரமான கொலைகள் நடந்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு, மெயின்புரியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு (ராம்சேவக், கப்டன் சிங் மற்றும் ராம்பால்) மரண தண்டனை விதித்தது. மேலும், மூவருக்கும் தலா ₹50,000 அபராதம் விதித்தது. முன்னதாக கூடுதல் மாவட்ட நீதிபதி இந்திரா சிங், மார்ச் 11 அன்று மேற்குறிப்பிட்ட 3 நபர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தண்டனையின் விபரங்கள் அறிவிக்கப்பட்டது. தண்டனையின் தீர்ப்பினை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களை கதிகலங்க வைத்த சம்பவம்:
இந்த துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அப்போதைய முதல்வர் வி.பி.சிங் ராஜினாமா செய்ய முன்வந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார், அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், அமைதி மற்றும் ஒற்றுமையுணர்வு மேலோங்க வேண்டும் என தெஹுலியில் இருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள சதுபூர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். இச்சம்பவத்திற்குப் பின் காங்கிரஸ் கட்சி படிப்படியாக தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.
நவம்பர் 1981 சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 30, 1981 அன்று அருகிலுள்ள சாதுபூர் கிராமத்தில் தலித்துகள் மீது மற்றொரு தாக்குதல் நடந்தது. கொள்ளையர் அனார் சிங் யாதவ் தலைமையிலான கும்பலைச் சேர்ந்த நபர்களால் 6 பட்டியல் பிரிவு சாதி பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: என்ன தான் நடக்குது நாக்பூரில்? வன்முறை சம்பவத்துக்கு காரணம் சாவா திரைப்படமா?
What's Your Reaction?






