Chennai Corporation : கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்வா? சென்னை மாநகராட்சி விளக்கம்!

Chennai Corporation Building Permit Fees Increase : சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் கட்டட அனுமதிக்கான கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதாக ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

Aug 6, 2024 - 08:28
Aug 6, 2024 - 12:25
 0
Chennai Corporation : கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்வா? சென்னை மாநகராட்சி விளக்கம்!
Chennai Corporation Building Permit Fees Increase

Chennai Corporation Building Permit Fees Increase : சென்னை உள்பட  தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் கட்டட அனுமதிக்கான கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

''இரக்கமே இல்லாமல் கட்டட அனுமதிக்கான கட்டணத்தை 112சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது. சென்னை(Chennai City) உள்ளிட்ட நகரங்களில் கட்டட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10% ஆகும். கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். 

இதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள்(Chennai Corporation), நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா?'' என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மாநகராட்சியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுவது கட்டாயமாகும். நடுத்தர மக்கள் பயன்பெறும் நோக்கில், சுயசான்றிதழ் அடிப்படையில் இணையவழி மூலம் விண்ணப்பித்த உடனே வெளிப்படைத்தன்மையாக கூர்ந்தாய்வு கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் இன்றி 2500 சதுரஅடி பரப்பளவு வரை உள்ள மனையில் 3500 சதுரஅடிக்கு உள்ளாக ஒப்புதல் வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

இதன்படி ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டணத்திற்கும் (சதுரஅடிக்கு 99.70ரூ) வித்தியாசம் இல்லை. மற்ற சில மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் சுயசான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கும் கட்டணம் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு அரசு குறைத்துள்ளது. 

எனவே சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர மக்கள் சுயசான்றின் அடிப்படையில் எளிமையாக கட்டட அனுமதி பெறும் பலன்களை தடுக்கும் நோக்கில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறன'' என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow