Me Too ஒரு பெண்ணாகவும் தாயாகவும் எனது மனம் பதறுகிறது... நடிகை குஷ்பு எமோஷனல் ட்வீட்!
பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திரைத்துறையில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஷூட்டிங்கின்போது நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் நடிகைகள் குமுறி வருகின்றனர். அதுவும் திரைத்துறையில் ஆண் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதாகவும் புகார்களை அடுக்கி வைக்கின்றனர்.
இதுதொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில், “திரைத்துறையில் தற்போது meetoo பூதாகரமாக வெடித்துள்ளது. தங்களக்கு நடந்த கொடுமைகளை வெளி உலகத்திடம் தைரியமாகக் கூறிய பெண்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். சமுதாயத்தில் தங்களது வாழ்வை உயர்த்திக்கொள்ள ஒரு பெண் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இது திரைத்துறை மட்டுமல்ல பெண்கள் வேலைக்கு செல்லும் எல்லா இடங்களிலும் இது நடக்கிறது.
நான் எனது இரண்டு மகள்களிடம் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசினேன். அவர்களது புரிதல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனது மகள்கள் பாதிகப்பட்ட பெண்களின் பக்கம் உறுதியாக நிற்கின்றனர். நீங்கள் இன்றைக்கு பேசுவீர்களோ அல்லது நாளை பேசுவீர்களோ தெரியாது. ஆனால் நிச்சயமாகப் பேச வேண்டும். பாலியல் குற்றங்கள் குறித்து பேசினால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது. உலகில் உள்ள மூலை முடுக்கெங்கும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டும்.
பாலியல் குற்றங்களில் பெண்கள் மீது வீண் பழி சுமத்துவதை நிறுத்துங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் இடத்திலிர்ந்து யோசித்துப் பாருங்கள்... அவர்கள் சொல்வதை ஒரு நிமிடம் காது கொடுத்து கேளுங்கள். அப்போதுதான் அப்பெண் உணர்ந்த வலி உங்களுக்குப் புரியும். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இந்த சமூகத்தின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்கிறது.
நான் என்னுடைய எட்டு வயதில் சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அதை வெளியே கூறினால் என்னுடைய அம்மாவையும் சகோதரர்களையும் அடித்து துன்புறுத்துவேன் என்று அவர் என்னை மிரட்டினார். அதனால் அப்போது அதுகுறித்து என்னால் வெளியே பேச முடியவில்லை. என்னை பாதுகாக்க வேண்டிய ஒருவரின் கைகளாலேயே நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். எட்டு வயதில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக என்னால் 15 வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது. அதற்கான தைரியம் எனக்கு அப்போதுதான் வந்தது.
மேலும் படிக்க: அமெரிக்காவிற்கு பறந்த முதல்வர் ஸ்டாலின்.. ஆட்சி நிர்வாகம் யார் கையில் தெரியுமா?
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் மீது வீண் பழி சுமத்தாமல் அவர்களை ஆண்கள் ஆதரிக்க வேண்டும். யாரோ முகம் தெரியாத பெண்தானே என்று நினைக்காமல் உங்களது தாயாக, சகோதரியாக நினைத்துப் பாருங்கள். நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம், ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த காயங்களை சரிசெய்து பாதுகாப்பான உலகத்திற்கு வழி வகுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பெண்ணாகவும் தாயாகவும் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நான் ஆதரவாக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?