அமெரிக்காவிற்கு பறந்த முதல்வர் ஸ்டாலின்.. ஆட்சி நிர்வாகம் யார் கையில் தெரியுமா?

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் இங்கு ஆட்சி நிர்வாகத்தையும், கட்சி நிர்வாகத்தையும் யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aug 28, 2024 - 10:42
Aug 29, 2024 - 10:24
 0
அமெரிக்காவிற்கு பறந்த முதல்வர் ஸ்டாலின்.. ஆட்சி நிர்வாகம் யார் கையில் தெரியுமா?
MK Stalin Udayanidhi Stalin

தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள்  அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு காரில் கிளம்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியெங்கிலும் திமுக தொண்டர்கள் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் எனப் பலரும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

இன்று அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கே செப்டம்பர் 2ஆம் தேதி வரை தங்கியிருப்பார். அதன்பிறகு சிகாகோ செல்லும் அவர் செப்டம்பர் 11 வரை அங்கே தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். மு.க.ஸ்டாலின் மீண்டும் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார். 

செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோவில் 'வணக்கம் அமெரிக்கா' என்கிற மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது என்றாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் முருகானந்தம்  தினசரி பணிகளை கவனிப்பதோடு நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் கடந்து சென்றாலும் என் கவனம் எல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் எனவே ஆட்சிப்பணி, கட்சிப்பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்று அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று அமெரிக்கா செல்லும் முன்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டதற்கு மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொன்னதோடு வெயிட்  அன்  ஸீ என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இந்த 17 நாட்களில் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை பொறுத்தே அவருக்கு பதவி உயர்வு பட்டாபிஷேகம் நடைபெறும். முதல்வர் பாணியில் சொல்லப்போனால் உதயநிதி ஸ்டாலின் பழுத்துவிடுவாரா பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow