விளையாட்டு

"அந்த ஒரு கேட்ச்.. ஆட்டத்தையே மாற்றிவிட்டது"- இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வேதனை!

அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


Harry Brook
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்குத் துணையாக ஷிவம் துபே 43 ரன்களும், இஷான் கிஷன் 39 ரன்களும் எடுத்தனர்.

ஜேக்கப் பெத்தேலின் போராட்டமும் தோல்வியும்

254 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இங்கிலாந்து அணிக்கு, ஜேக்கப் பெத்தேல் நம்பிக்கை அளித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து சதம் அடித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தோல்விக்குக் காரணமான 'கேட்ச்'

தோல்விக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ஆடுகளத்தின் தன்மையைத் தவறாகக் கணித்துவிட்டதாகக் ஒப்புக்கொண்டார். "ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவும் என்று நினைத்தோம், ஆனால் அது பேட்டிங்கிற்கு முழுமையாகச் சாதகமாக இருந்தது" என்றார். மேலும், "இந்த ஆட்டத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு சஞ்சு சாம்சனின் கேட்ச்சை தவறவிட்டதுதான். 'கேட்சுகள் தான் போட்டியைத் தீர்மானிக்கும்' (Catches win matches) என்பார்கள். சாம்சனின் கேட்ச்சை விட்டது எங்களை ஆட்டத்திலிருந்து பின்னுக்குத் தள்ளிவிட்டது," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

சஞ்சு சாம்சனின் அதிரடி

கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்ட அந்த வாய்ப்பைப் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இந்திய அணியின் ஸ்கோரை 250-க்கும் மேல் உயர்த்தினார். இதுவே இறுதியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கும் தடையாக அமைந்தது.