HBD CHENNAI: சென்னையின் கதையை சொல்லும் ‘ஐஸ் ஹவுஸ்’
சென்னையின் வரலாறு என்று எடுத்துக் கொண்டாலே சென்ட்ரல் ரயில் நிலையம், லைட் ஹவுஸ் போன்ற குறிப்பிட்ட சில கட்டடங்களின் கதைகளை மட்டுமே சென்னவாசிகள் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் இன்றளவும் சென்னையின் கதையை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சுவாரஸ்மிக்க கதையை சுமந்துக் கொண்டு வங்கக் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது ”ஐஸ் ஹவுஸ்”.
அடர் குளிர் மிதமான வெயில் கொண்ட ஐரோப்பாவில் இருந்து வந்த ஆங்கிலேயர்களால் இந்தியாவின் வெம்மையைத் தாக்குபிடிக்க இயலாமல், பலர் தங்கள் நாட்டிற்கே திரும்பிச் சென்றனர்… இந்த சூழலானது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி ஊர் சுற்றிக் கொண்டிருந்த பெட்ரிக் டூடர் என்பவருக்கு வாழ்க்கை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்தியா மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பல நாடுகள் வெம்மைத் தன்மை கொண்டவையாக இருந்தன. அப்போது ஊர் சுற்றிக் கொண்டிருந்த டூடர் அமெரிக்காவில் உள்ள ஒரு பனியால் உறைந்த நதியை கண்டார். அதனைக் கண்டதும் அந்த ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்து தனக்கென்று தனி வியாபாரத்தை உருவாக்க நினைத்தார். அவர் நினைத்ததுபோல் அந்த பிளான் முதலில் Work Out ஆகவில்லை. ஆனால் இந்தியா அதனை சாத்தியமாக்கியது.
மற்ற நாடுகளை ஐஸ் கட்டிகள் நிரம்பியக் கப்பல் போய் சேர்ந்தபோது கப்பல் மட்டுமே இருந்தது, ஐஸ் கட்டி கரைந்துவிட்டன. இதனால் சில முன்னேற்பாடுகளையும் டூடர் செய்திருந்தார். அதை செய்தும் இந்தியாவிற்கு வரும்போது இந்த ஐஸ் கட்டிகளில் பாதி கறைந்திருந்தன. மிச்சம் இருந்த ஐஸ் கட்டிகளை சென்னையில் இருந்த ஆங்கிலேயர்கள் அதிக விலைக் கொடுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால் இந்த ஐஸ் கட்டிகளை கப்பல்களில் இருந்து இறக்கினால் போதுமானது அல்ல, அதனை சேமித்து வைக்கவும் ஒரு இடம் தேவை என்று உணர்ந்த டூடர், பம்பாய், கொல்கத்தா, மெட்ராஸ் ஆகிய இடங்களில் கிடங்கை கட்ட முடிவெடுத்தார். அப்படி டூடர் மெட்ராஸ் 1842 ஆம் ஆண்டு கட்டிய கட்டடம் தான் இன்றைய ஐஸ் ஹவுஸ்.
இங்கிருந்து விற்பனை செய்யப்பட்ட ஐஸ் கட்டிகள் ஆங்கிலேய அதிகாரிகளின் மாலை நேர மது விருந்துகளை குளிர்வித்தன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இந்த ஐஸ் வியாபாரத்தில் டூடர் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், 1880 ஆம் ஆண்டு இந்தியாவில் நீராவி முறையில் ஐஸ் கட்டிகளை தயாரிக்கும்முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெருத்த அடிவாங்கியது டூடரின் ஐஸ் வியாபாரம். இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கே மூட்டைக்கட்டிய டூடர், ஐஸ் ஹவுஸை மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பிலிகிரி அய்யங்காருக்கு விற்று சென்றார்.
பிலிகிரி அய்யங்காரோ இந்த கட்டடத்தில் ஜன்னல்கள், வராண்டக்களை அமைத்து வீடாக மாற்றியதோடு, இந்த வீட்டின் ஒரு பகுதியில் ஏழை மாணவர்களையும் தங்க வைத்திருந்தார். ஐஸ் கட்டிகளை பாதுக்காக்க ஒரு அடைத்த குடோனாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் காற்று வசதி என்பது பெரிய அளவில் இல்லை.
இப்படியான ஒரு சூழலில் தான் சிகாகோ மாநாட்டில் உலகப்புகழ் பெற்ற உரையை ஆற்றிவிட்டு தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் தீவிர ரசிகரான பிலிகிரி அய்யங்கார், சுவாமிகள் தன் வீட்டில் தங்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைக்க, அதனை ஏற்றுக் கொண்ட விவேகானந்தரும் ஐஸ் ஹவுஸிற்கு வருகை புரிந்தார். இதனைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு சென்னையில் ஒரு நிரந்தர மையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழ, ஐஸ் ஹவுஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டது. இதுதான் மெட்ராஸில் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை என்று கூறப்படுகிறது.
பிலிகிரி அய்யங்கார் மறைவிற்கு பிறகு பலரது கைக்கு சென்ற ஐஸ் ஹவுஸ் இறுதியாக அரசாங்கத்தின் கையில் வந்தடைந்தது. 1963 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஐஸ் ஹவுஸிற்கு சுவாமி விவேகானந்தர் இல்லம் என்று பெயர் சூட்டப்பட்டது.
இப்படியாக 182 ஆண்டுகளாக ஒரு அற்புதமான குளிர்மையான கதையை அவ்வழியாக பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொரு சென்னைவாசிகள் மட்டுமல்ல சென்னையை நம்பி பிழைக்க வந்த மற்ற ஊர்வாசிகளுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறது ஐஸ் ஹவுஸ்...
What's Your Reaction?