ஈஷா சார்பில் பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா.. 2,000 விவசாயிகள் பங்கேற்கின்றனர்.. முழு விவரம்!

Isha Foundation Food Festival in Vellore : ஈஷா நடத்தும் நெல் மற்றும் உணவுத் திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து 'மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்' வழங்கப்பட உள்ளது.

Jul 25, 2024 - 20:26
Jul 26, 2024 - 10:12
 0
ஈஷா சார்பில் பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா.. 2,000 விவசாயிகள் பங்கேற்கின்றனர்.. முழு விவரம்!
Paddy And Food Festival Conducted By Isha In Vellore

Isha Foundation Food Festival in Vellore : 'ஈஷா மண் காப்போம் இயக்கம்' சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா' வேலூரில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற உள்ள இந்த உணவுத் திருவிழாவை வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக 'ஈஷா மண் காப்போம்' இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், வேலூர் ஈஷா யோக மையத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 ஆண்டுகளாக நம் மண்ணை காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற வண்ணம் உள்ளது. 

இந்த இயக்கத்தின் மூலம் இதுவரை 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர். மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமும் அது தான். 

எனவே இயற்கை விவசாயத்தை  மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு பயிருக்கும்  ஏற்றவாறு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது 'ஆடி பட்டம் காலம்' என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த 'நெல் திருவிழா' நடத்தப்படுகிறது.

மேலும் நெல் விவசாயத்தை பல வருடம் செய்த போதிலும், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் சோர்வாக உள்ளனர். அதே வேளையில் சில முன்னோடி விவசாயிகள் நெல் விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் செய்து வருகின்றனர்.  நெல் விவசாயத்தை எவ்வாறு லாபகரமாக செய்ய முடியும் என்பது குறித்த தங்களின் அனுபவங்களை முன்னோடி நெல் விவசாயிகள் இந்த 'பாரத பாரம்பரிய நெல்' மற்றும் உணவுத் திருவிழாவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். குறிப்பாக மரபு வழி கால்நடை மருத்துவரான டாக்டர் புண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வரும் விவசாயி பொன்னையா மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் தான்யாஸ் நிறுவனர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற உள்ளன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நமது மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.  

அது மட்டுமின்றி, பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விதை நெல்லும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.

மேலும் கூடுதல் சிறப்பாக இந்த திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து 'மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்' வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 மற்றும் 94425 90077 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்று முத்துக்குமார் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow