சுற்றுலா சென்ற சிறுமிக்கு நேரந்த சோகம்.. மது ஊற்றிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை
மும்பையில் இருந்து புதுவைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த 16வயது சிறுமி ஒருவர் புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் கடந்த 27ஆம் தேதி வந்துள்ளார். 30ஆம் தேதி தனியாக புதுச்சேரியை சுற்றிப் பார்க்கச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமி என்பதால் போலீசாரும் தீவிரம் காட்டி தேடியபோது, சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்டோ ஒன்றில் சிறுமி ஏறிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து குறிப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர் குறித்து விசாரித்தபோது, கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் என்பது தெரியவர அவரைப் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.
30ஆம் தேதி இரவு சிறுமியைப் பார்த்த காஜா மொய்தீன், அவரிடம் நைஸாகப் பேசி மது வாங்கிக் கொடுத்துள்ளார். மதுபோதையில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர், பின்னர் அவரது முடியை கத்தரித்து சிறுவன் போல மாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவன் வழி தவறி வந்துவிட்டதாக மனைவியிடம் கூறி, இரவில் வீட்டில் தங்க வைத்தவர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போதையின் கிறக்கத்திலேயே இருந்த சிறுமியை, மறுநாள் காலை தந்திராயன் குப்பம் கடற்கரை விடுதிக்கு அழைத்துச் சென்றவர், அங்கு சென்னையில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் மூவரிடம் ஒப்படைத்து சென்றதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை எய்த காஜா மொய்தீனை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர், சென்னைக்கு சிறுமியை கடத்திச் சென்றவர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2ஆம் தேதி மாலை, புதுச்சேரி கடற்கரையில் அதே சிறுமி சோர்வான நிலையில் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலில் போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை காரில் மூன்றுபேர் சென்னைக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு அறை ஒன்றில் வைத்து மேலும் இருவரோடு சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் ஓலா கார் ஒன்றை ஏற்பாடு செய்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமி கூறிய நேரத்தை வைத்து, சுங்கச்சாவடியில் வந்த காரின் எண்ணை வைத்து அந்தக் காரை புக் செய்த தகவலைக் கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞர்கள் மூவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள், சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவர அவர்களைக் கைது செய்தவர்கள் மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரையில் மாயமான சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதும், இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும் பரபரப்பாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலை நகரைச் சேர்ந்த 9வயது சிறுமி, இளைஞர் மற்றும் முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் தற்போது மும்பை சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






