அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. சிறப்பு விசாரணை குழுவிடம் ஆவணம் ஒப்படைப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். மேலும், தான் இன்னொரு சாரிடம் (Sir) அழைத்து செல்வேன் என்றும் ஞானசேகரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். ஞானசேகரன், திமுக கட்சியில் இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வலம் வந்த நிலையில் அதனை திமுகவினர் மறுத்ததாக கூறப்படுகிறது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்தது. இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பான ஆவணங்கள், சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், முதல் தகவல் அறிக்கை எவ்வாறு வெளியானது என்ற விசாரணை தொடங்கி உள்ளது.
What's Your Reaction?