மதுரையில் மட்டும் இவ்வளவு காலிப்பணியிடமா..? ஆர்டிஐ-யில் வெளியான தகவலால் அதிர்ச்சி

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்வாரிய கோட்டங்களில் மட்டும் 70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு வகையில் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

Dec 24, 2024 - 12:02
 0
மதுரையில் மட்டும் இவ்வளவு காலிப்பணியிடமா..? ஆர்டிஐ-யில் வெளியான தகவலால் அதிர்ச்சி
70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு வகையில் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் குற்றச்சாட்டு

இந்தியன் குரல் என்ற அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஆர்டிஐ ஆர்வலருமான என்.ஜி.மோகன், மதுரை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, மின் பகிர்மான அலுவலகங்களில் தற்போதுள்ள கம்பியாட்கள் (வயர்மேன்கள்) எண்ணிக்கை, காலியாக உள்ள பணியிடங்கள் உள்பட மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு ஆர்டிஐ பதிலளித்துள்ளது. 52 பக்கங்களைக் கொண்ட இந்தப் பதிலில், மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளர் பொறுப்பில் உள்ள மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 267 கம்பியாட்கள் (வயர்மேன்) பணியிடங்களில் 375 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இந்நிலையில், 892 காலிப் பணியிடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர் என்.ஜி.மோகன் கூறுகையில்,  70 சதவிகித கம்பியாட்கள்  (வயர்மேன்கள்) பணி காலியாக உள்ளதால் கிராமப்புறங்களில் ஏற்படும் மின் தடைகளைச் சரி செய்ய ஆட்கள் இல்லை. இதன் காரணமாக, அந்தந்த பகுதிகளில் மின் கம்பம் ஏறத் தெரிந்தவர்கள், மின் வாரியத்திற்கு தொடர்பில்லாத நபர்கள், மின்மாற்றியை (டிரான்ஸ்ஃபார்மர்) அணைத்துவிட்டு, ஃபியூஸ் போடும் நிலை உள்ளது. 

இதற்காக பொதுமக்களிடம் 100 ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்கள். தரமான ஃபியூஸ் கட்டைகளை போடாததன் காரணமாக விரைவாகவே மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் அதிகமாகப் பாதிப்பிற்கு ஆளாகுகின்றனர். ஆகையால், மின் வாரியம் கம்பியாட்கள் பற்றாக்குறையைப் போக்க, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow