’அது வேற வாய், இது வேற வாய்’.. மாற்றி மாற்றி பேசும் தவெகவினர்.. தலைவலியில் விஜய்
அரியலூரில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி டிசம்பர் 22ம் தேதி கட்சியில் இருந்து விலகுவதாக கூறிய பெண் நிர்வாகி, இன்று மீண்டும் கட்சி கொடியை ஏற்றும் விழாவில் பங்கெற்றுள்ளார். தவெக கட்சிக்கு ஒரு கும்பிடு எனக்கூறிவிட்டு, நான் அப்படி சொல்லவே இல்லையே என அப்பெண் நிர்வாகி மாற்றி கூறியுள்ள அந்தர்பல்டி சம்பவத்தை விலக்குகிறது இந்த தொகுப்பு...
தவெக தலைவர் விஜய், முதல் மாநாட்டில் பெண் உரிமை, சமத்துவம், ஆட்சி-அதிகார பங்கு என பல விஷயங்களை வைத்து தனது அரசியல் பில்டிங்கை உறுதியாக கட்டிவந்தாலும், அக்கட்சியின் சந்து பொந்துகளில், அதாவது கிராமப்பகுதிகளில் உள்ள குட்டி பகவதிகளின் நடவடிக்கை அக்கட்சியின் பேஸ்மெண்ட் சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது. அப்படி ஒரு அந்தர்பல்டி சம்பவம் தான் அரியலூர் களத்தை ஆட்டம் காணவைத்துள்ளது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கார்குடி காலனி தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் தவெக மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் டிசம்பர் 23ம் தேதி அப்பகுதியில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது மகளிருக்கு உரிய மரியாதை தரவில்லை என குற்றம்சாட்டி கட்சியிலிருந்து விலகுவதாக கூறி அவர் அமைத்திருந்த கொடி கம்பத்திலிருந்து கட்சிக்கொடியை இறக்கினார்.
இது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இதுதான் உங்க பெண்ணுரிமையா பாஸ் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதனையடுத்து, அதேபகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி ஆர்.எம்.நேரு இச்சம்பவம் குறித்து களத்தில் நின்று பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அப்பதிவில், பிரியதர்ஷினி வேண்டுமென்றே கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு அவதூறு பரப்புவதாகவும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி தவெக எனவும் உணர்ச்சி பொங்க பேசினார். மேலும், பிரியதர்ஷினியின் அண்ணன் மற்றும் தம்பி, திமுக மற்றும் விசிக கட்சிகளில் இருப்பதால் இது தவெக மீது திட்டமிட்டு நடத்தப்படும் சதி, இதற்கு அவர்கள் விஜய்யிடம் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தார்.
இவரின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்களும், இதை ஊர்ஜிதமாக நம்பி ஆளும் கட்சிகளை சமூக வலைத்தளங்களில் வருத்தெடுக்க தொடங்கினர். இதனையடுத்து விஷயம் பூதாகரமாக, இன்று தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கார்க்குடி கிராமத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, பிரியதர்ஷினியை வைத்து மாவட்ட செயலாளர் சிவா மூலம் நேற்று கொடிய இறக்கிய அதே கொடிக்கம்பத்தில் மீண்டும் இன்று கொடியை ஏற்றி விழாவை சிறப்பித்துள்ளனர் தவெகவினர்.
இது குறித்து பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”நேற்று சில முரண்பாடுகளால் கொடிய இறக்கினோம். இன்று நானே மாவட்ட செயலாளரை வைத்து கொடியை ஏற்றி உள்ளேன்” என தெரிவித்தார். இனி தவெக பக்கமே தலைவைத்து படுக்கமாட்டேன் என அவர் நேற்று கூறியது பற்றி அவரிடம் கேட்டபோது, ”தவெகவில் இருந்து விலகுகிறேன் என சொல்லவில்லை” என அந்தர்பல்டி அடித்தார் பிரியதர்ஷி. இதுகுறித்து அவரிடம் துருவித் துருவிக் கேட்க, “மீண்டும் கட்சியில் சேர்ந்தது விஜயின் கொள்கைகளால் தான். என்னுடைய விருப்பத்தின் படியே கட்சிக் கொடியை மீண்டும் ஏற்றியுள்ளேன்” என இங்கொன்றும் அங்கொன்றுமாய் பேசினார் பிரியதர்ஷினி.
இவரைத்தொடர்ந்து பேசிய மகளிர் அணி நிர்வாகி வசந்தி, ”தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை மதிப்பில்லை என்று மற்றவர்களால் பரப்பப்படும் அவதூறு கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தவெகவின் முக்கிய கொள்கை. பிரியதர்ஷினிக்கு உண்மையை புரியவைத்தோம்.அவர் புரிந்து கொண்டார், இதனால் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக கூறியவர்கள் இன்று முழு சம்மதத்துடன் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர்” என கூறினார்.
இப்படி பிரியதர்ஷினி, தவெக நிர்வாகி ஆர்.எம்.நேரு, மகளிர் அணி நிர்வாகி வசந்தி ஆகியோர் மாற்றி மாற்றி பேசியுள்ளதால், பிரியதர்ஷினி உண்மையிலேயே விருப்பத்தின் அடிப்படையில் தான் கட்சியில் இணைந்தாரா, வர்ப்புறுத்தலின் பேரில் இணைந்தாரா? என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், அரியலூரில் நடந்த இந்த அந்தர்பல்டி சம்பவத்தால், அது வேற வாய், இது வேற வாய் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
What's Your Reaction?