TVK Vijay: தவெக விழாவில் விஜய்யின் அப்பா, அம்மா ஆஜர்... மனைவியும் குழந்தைகளும் மிஸ்ஸிங்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், விஜய்யின் அம்மா, அப்பா இருவருமே பங்கேற்ற நிலையில், மனைவி சங்கீதாவும் குழந்தைகளும் கலந்துகொள்ளவில்லை.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், இன்று அதன் கொடியையும் பாடலையும் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் தவெக கொடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்கு தவெகவின் முக்கியமான நிர்வாகிகளுக்கு மட்டுமே விஜய் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் முன்பு போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியில், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றனர். இருவருக்குமே முன் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதேபோல், விஜய்க்காக அங்கே தனியாக எந்த இருக்கையும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக விஜய்யும் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மனைவி சங்கீதா அவரது நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் விஜய் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அதேநேரம் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதற்கு விஜய் இதுவரை வாழ்த்துத் தெரிவிக்கவில்லை எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
மேலும் படிக்க - தவெக கொடியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இந்நிலையில், இன்றைய தவெக கொடி அறிமுக விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் அம்மா, அப்பாவை தவிர அவரது குடும்பத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. விஜய்யின் மகன் சஞ்சய் கூட இதில் கலந்துகொள்ளாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் விஜய் தனது அம்மா, அப்பா ஆகியோருடன் கூட பேசுவது கிடையாது, அவர்களை சந்திப்பது இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தனது அப்பா எஸ்.ஏ.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது அப்பா, அம்மா ஆகியோருடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோவும் வைரலானது. அதன்பின்னர் தனது அம்மாவுக்காக சாய் பாபா கோயில் கட்டிக் கொடுத்தார் விஜய். இதனிடையே இன்றைய கொடி அறிமுக விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது, விஜய்யின் கையை அவரது அம்மா ஷோபா பிடிக்க வந்தார். ஆனால், விஜய்யோ அவரை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?