சென்னை: கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் சொந்தமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், இன்று அதன் கொடியை அறிமுகப்படுத்தி பாடலையும் வெளியிட்டார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, அம்மா ஷோபா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சரியாக காலை 9.27 மணிக்கு கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அதனைத் தொடர்ந்து அலுவலகத்திலும் கொடியை பறக்கவிட்டார்.
முன்னதாக கட்சியின் உறுதிமொழியை மேடையேறி வாசித்தார் விஜய். அதனை விஜய் சொல்ல சொல்ல தவெக கழக நிர்வாகிகளும் உறுதிமொழி ஏற்றனர். தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்றும் இந்த கொடியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வகை மலைரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. தவெக கொடியில் உள்ள குறியீடுகள் குறித்து விஜய் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், தவெக கொடிக்கு என ஒரு வரலாறு இருப்பதாகவும், அதுகுறித்து பின்னர் விளக்குவேன் என்றும் விஜய் கூறியுள்ளார். விஜய் அறிமுகப்படுத்திய தவெக கொடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இதனை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வர, இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் தங்களது வேலையை தொடங்கிவிட்டனர். அதாவது தவெக கொடியை பார்த்தால் அது Fevicol Logo-ஐ திருப்பிப் போட்டது மாதிரி இருக்குது விஜய்ண்ணா என ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது தவெக கொடியில் இரண்டு போர் யானைகள் வாகை மலரை வணங்குவது போல உள்ளது.
மேலும் படிக்க - தவெக கொடிப் பாடல் லிரிக்ஸ்!
Fevicol Logo-வில் இரண்டு யானைகள் எதிர்த் திசையில் செல்வது போல இருக்கும். அதனை குறிப்பிட்டே இந்த மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இன்னும் சிலர் முத்தூட் பைனான்ஸ் லோகோ போல இருப்பதாக தவெக கொடியை ட்ரோல் செய்து வருகின்றனர். இது ஒருபக்கம் என்றால், பாடலில் இருக்கும் எழுத்துப் பிழைகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது “சிருசும் பெருசும் ரசிக்குது சிங்கப் பெண்கள் சிரிக்குது” என்ற வரியில், எழுத்துப் பிழை இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது ‘சிருசு’ அல்ல ‘சிறுசு’ என்பதை குறிப்பிட்டு, இதை கூட கவனிக்க ஆள் இல்லையா என தவெகவினரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என கட்சியின் பெயரை அறிமுகப்படுத்திய போதும், மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. அதாவது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் தான் முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், வெற்றி–கழகம் இடையே ‘க்’ என்ற ஒற்றெழுத்து கண்டிப்பாக வர வேண்டும் என பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதன்பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என மீண்டும் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது தவெக கொடியில் இருக்கும் லோகோ மீம் மெட்டீரியலாக மாறி வைரலாகி வருகிறது.