சர்வதேச டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 8வது "அல்டிமேட் டேபிள் டென்னிஸ்" விளையாட்டு தொடர் சென்னையில் இன்று முதல் (22.08.24) தொடங்கி, செப்டம்பர் 7ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறுகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா, உலக தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்ஸ், தமிழக வீரர்கள் சரத்கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் ஆகியோர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
எட்டு அணிகளில் 16 சர்வதேச வீரர்கள் உட்பட 46 வீரர்கள் களமிறங்குகின்றனர். நடப்பு சாம்பியனான அத்லீட் கோவா சேலஞ்சர்ஸ் அணி அறிமுக அணியான ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சென்னை லயன்ஸ் அணியின் கேப்டன் சரத் கமல், “கடந்த முறை இந்த தொடரில் சென்னை லயன்ஸ் அணி இரண்டாம் இடமும், கடந்த 2022 இல் சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளது. இந்த முறை மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிப்போம்.
குறிப்பாக பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் அணி காலிறுதி வரை சென்று சிறப்பான திறனை வெளிப்படுத்தினர். முதல்முறையாக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று இருந்தோம். ஒலிம்பிக் தொடருக்கான அனுபவங்களை இந்தத் தொடரில் செயல்படுத்துவோம்.
என்னை பொருத்தவரை 2004இல் முதல் ஒலிம்பிக் தொடரில் விளையாடினேன். தற்போது 5 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்றுள்ளேன். உலகத் தரவரிசையில் இந்தியாவின் இடம் என்பது சில வருடங்களாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே அடுத்த ஒலிம்பிக் அல்லது, 2032இல் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா ஒரு பதக்கமாவது நிச்சயம் வெல்லும். அடுத்த ஒலிம்பிக்கில் நான் விளையாட போவதில்லை.
இந்த அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதால், இளைஞர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கப் பெறுகிறது. சர்வதேச வீரர்களுடன் விளையாடும்போதும், உலக சாம்பியன்களுடன் விளையாடும்போதும் அனுபவம் கூடுகிறது. சர்வதேச போட்டியில் பங்கேற்கும் போது மனவலிமை கூடுகிறது. எனவே இது நல்ல ஒரு வழியை உருவாக்குகிறது. சிறு வயது விளையாட்டு வீரர்களுக்கும் இந்த தொடர் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.
கடந்த ஐந்து ஆறு வருடங்களாக தான் இந்தியாவில் விளையாட்டை தொழில் முறை நோக்கத்தில் கவனிக்கப்பட்டிருக்கிறது. வரக்கூடிய காலங்களில் அதன் வளர்ச்சி கூடுமேயானால் விளையாட்டு துறையில் நிறைய சாதனைகள் உருவாகும். இளம் வயதினருக்கு தங்கள் வாழ்க்கையில் விளையாட்டு ஒரு அங்கம் வகிக்கும். அதனை பொழுதுபோக்காகவோ அல்லது தொழில் முறை வழியிலோ பயன்படுத்த முயற்சியுங்கள், அது உங்களுக்குள்ளேயே நிறைய மாற்றங்களை கொண்டு வரும்” என பேசினார்.