700 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.. 2-வது நாளாக மீட்பு பணி தீவிரம்

700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் மூன்று வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dec 24, 2024 - 11:01
 0
700 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.. 2-வது நாளாக மீட்பு பணி தீவிரம்
700 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சென்ட்டா என்ற மூன்று வயது குழந்தை எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் நேற்று (டிசம்பர் 24) விழுந்தது.

சென்ட்டா ஆழ்த்துளை கிணற்றில் விழுந்ததை பார்த்த அவரது மூத்த சகோதரி காவ்யா தனது பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேரமாக போராடியும் குழந்தையை மீட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர், அப்பகுதிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க முயற்சி செய்துள்ளனர். இதுவும் தோல்வியடைந்ததால் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய மீட்பு படை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

150 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தைக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையை கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கூறியதாவது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றை மூட திட்டமிட்டு அதன் குழாய்களை அப்புறப்படுத்தினோம். கிணற்றை மூடும் பணிகளை தொடங்குவதற்கு முன்பு குழந்தை கிணற்றில் தவறி விழுந்து விட்டது என்று வேதனையுடன் கூறினர். மேலும், குழந்தை கிணற்றில் தவறி விழுந்த நேரத்தில் தாங்கள் வீட்டில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்ற முயற்சியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மூத்த அதிகாரிகளுடன் பேசிய தொழில்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குழந்தையை மீட்கும் பணியை துரித்தப்படுத்துமாறு வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தவுசா மாவட்டத்தில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 55 மணிநேர நீண்ட மீட்பு நடவடிக்கைக்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow