நினைவு தினம்: பெரியார் குறித்து பெருமிதம்.. திமுக முதல் தவெக வரை
தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பின்னர் முதலமைச்சர் பேசியதாவது, திராவிட மாடல் என்றால் என்ன என கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார். தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர். ஊருக்குள் வர தடை, கோவிலுக்குள் வர தடை, போராட தடை என அனைத்தையும் உடைத்தவர் பெரியார். மறைந்து 51 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரியார் பேசப்படுகிறார் என்று கூறினார்.
திமுக மட்டுமல்லாமல் பல்வேறு கட்சி தலைவர்களும் பெரியார் நினைவு தினத்தையொட்டி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர். கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பெரியார் பாதையில் பயணிப்போன் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், தந்தை பெரியாரின் 146-வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விஜய், மலர் தூவி மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?