'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் இல்லை'.. அமித்ஷா திட்டவட்டம்.. தேர்தல் அறிக்கை வெளியீடு!

''ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Sep 7, 2024 - 02:54
Sep 7, 2024 - 15:37
 0
'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் இல்லை'.. அமித்ஷா திட்டவட்டம்.. தேர்தல் அறிக்கை வெளியீடு!
Jammu And Kashmir

ஜம்மு: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்படுகின்றன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 'சட்டப்பிரிவு 370' கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்களும் வாக்களிக்க உற்சாகமாக உள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு-காஸ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். பின்பு பேசிய அமித்ஷா, ''ஜம்மு-காஸ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 'சட்டப்பிரிவு 370' நீக்கப்பட்டது இந்திய வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது. 2014ம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆட்டம் போட்டனர்.

ஆனால் 2014ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் இந்த காட்சி மாறி வருகிறது. 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரில் நடந்தது பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. ஜம்மு காஷ்மீரில் அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் பயங்கரவாதிகளின் ஹாட் ஸ்பாட், சுற்றுலாவின் ஹாட் ஸ்பாட் ஆக மாறும்'' என்று கூறினார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:- 

* 'மா சம்மன் யோஜனா' திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதியவர்களுக்கு ரூ.18,000 வழங்கப்படும். 

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். 

* பிரகதி சிக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 பயணப் படி வழங்கப்படும். 

* சுய உதவிக்குழுக்களுக்கு அரசு சார்பில் கடனுதவி வழங்கப்படும்.

* அடல் வீட்டுத் திட்டத்தின் கீழ் நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும்.

* முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்படும்.

* விவசாய தேவைகளுக்கான மின் கட்டணம் 50% குறைக்கப்படும்.

* பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

* 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

* 10,000 கிமீக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்படும்.

* மாநிலத்தில் அனைத்து முக்கிய சுரங்கப்பாதை திட்டமும் முடிக்கப்படும்.

* ஜம்மு-காஷ்மீரில் மெட்ரோ சேவை தொடங்கப்படும்.

* இந்து கோயில்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் சீரமைத்து புதுபிக்கப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow