மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள்.. 3 பேர் கைது

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dec 24, 2024 - 13:39
 0
மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள்.. 3 பேர் கைது
வாகனங்களில் கழிவுகளை ஏற்றி வந்த ஓட்டுநர்கள் மூன்று பேர் கைது

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகளை வாகனங்களில் ஏற்றி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், விவசாய நிலங்களுக்குள் கொட்டி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, பல வாகனங்களை பொதுமக்கள் சிறைப்பிடித்து புகார் தெரிவித்தாலும் இந்த பிரச்சனை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், தற்போது கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை சிறைப்பித்து வாகன ஓட்டிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழக- கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனை சாவடி வழியாக கழிவுகளை ஏற்றி வரும் கேரள வாகனங்களை போலீசார் சிறைப்பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதனால்,  கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள எல்லைகள் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைய துவங்கி உள்ளனர். அதன்படி நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான கொல்லங்கோடு வழியாக இரண்டு வாகனங்கள் துர்நாற்றம் வீசக்கூடிய இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைந்து புதுக்கடை அருகே கைசூண்டி வழியாக நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் புதுக்கடை போலீஸார் அந்த இரண்டு வாகனங்களையும் விரட்டி சென்று கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், நெல்லை மாவட்டத்தின் ஆறு இடங்களில் சட்டவிரோதமாக  கேரளா மாநிலம் திருவனந்தபுரம் புற்றுநோய் மண்டல மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மற்றும் சில தனியார் மருத்துவமனையின் கழிவுகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டுவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மூன்று நாட்களுக்குள் மருத்துவக் கழிவுகள் அனைத்தையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேரளா அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கேரளாவில் இருந்து ஆறு பேர் தலைமையிலான 70 பேர் கொண்ட குழுவினர் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுகளை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow