Consumer Grievances Commission Fine on Hotel : விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் பிரபலமான ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வழுதுரெட்டி பகுதியைச் சேர்ந்தவரும், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கம் என்ற அமைப்பின் மாநில தலைவருமான ஆரோக்கியசாமி என்பவர் இந்த ஹோட்டலில் 25 சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார். ஒரு சாப்பாட்டின் விலை ரூ.80 ஆகும்.
வீட்டுக்கு சென்று பார்சலை பிரித்து பார்த்தபோது, சாதத்துடன் சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம் ஆகியவை இருந்துள்ளது. மேலும் ஒரு வாழை இலையும் இருந்துள்ளது. ஆனால் ஊறுகாய் வைக்கவில்லை. இதேபோல் சாப்பாடு வாங்கியதற்கான பில்லையும் அவருக்கு வழங்காமல் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளனர்.
ரூ.80 விலை கொண்ட சாப்பாட்டில் 1 ரூபாய் மதிப்புள்ள ஊறுகாய் பொட்டலம் வைப்பது அந்த ஹோட்டலின் வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து ஆரோக்கியசாமி உடனடியாக அந்த ஹோட்டலுக்கு சென்று, ''நீங்கள் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்கவில்லை. ஊறுகாய் இல்லாமல் சாப்பாட்டை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டேன். ஆகையால் 25 ஊறுகாய் பொட்டலத்துக்கு 25 ரூபாய் கொடுங்கள்'' என்று கேட்டுள்ளார்.
ஆனால் ஹோட்டல் உரிமையாளர் 25 ரூபாயை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆரோக்கியசாமி, ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராக விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், ''ஆரோக்கியசாமி வாங்கிய சாப்பாடு பார்சல் ஊறுகாய் வைக்காதது ஹோட்டலின் சேவை குறைபாடை காட்டுகிறது.
ஆகவே மனஉளைச்சல் அடைந்த ஆரோக்கியசாமிக்கு ஹோட்டல் நிர்வாகம் ரூ.30,000 வழங்க வேண்டும். வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க வேண்டும். இதுதவிர 25 ஊறுகாய் பொட்டலங்களுக்காக 25 ரூபாயும், சாப்பாடு பார்சல் வாங்கியதற்கான பில்லும் வழங்க வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹோட்டல் உரிமையாளர் 45 நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்த தவறினால், மாதம் ஒன்றுக்கு 9% வட்டியுடன் அந்த தொகையை செலுத்த வேண்டியது இருக்கும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரோக்கியசாமிக்கு ஆதரவாக அமைந்துள்ள இந்த தீர்ப்பை வைத்து சமூகவலைத்தளங்களில் நெட்டின்சன்கள் வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ''விழுப்புரம் மட்டுமல்ல பல்வேறு ஹோட்டல்களிலும் இதேபோல்தான் செய்கின்றனர். நுகர்வோர் குறைதீர் ஆணையம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது'' என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
''பார்சல் வாங்கினால் மட்டும் அல்ல; ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டாலும் ஊறுகாய் வைக்கப்படுவதில்லை. இனிமே நாமளும் ஊறுகாய் வைக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு சென்று விட வேண்டியதுதான்'' என்று சிலர் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.