சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புடைய தங்கம் கடத்தல்... 3 பேர் கைது..!
சென்னை விமான நிலையத்தில், நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஊழியர் உட்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான 2.2 கிலோ தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படையினர் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். மத்திய வருவாய் புலனாய் துறையினர் சாதாரண உடைகளில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை போல் புறப்பாடு பகுதி மற்றும் வருகை பகுதி ஆகிய இடங்களில் கண்காணிப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் துபாயிலிருந்து இலங்கை வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறையினர் ரகசியமாக கண்காணித்த போது அதில் சுமார் 28 வயது உடைய ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்தப் பயணியை தீவிரமாக கண்காணித்தனர்.
அந்தப் பயணி விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு இடையே, சுமார் 12 அடி உயரம் கண்ணாடி தடுப்பு உள்ளது. அதன் அருகில் நீண்ட நேரமாக இருந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் புறப்பாடு பகுதியில் இலங்கைக்கு செல்வதற்காக மற்றொரு ஆண் பயணி வந்து நின்றதும் வருகைப் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த 28 வயது ஆண் பயணி தான் வைத்திருந்த கைப்பையில் இருந்து பந்து போன்ற உருண்டைகளை 12 அடி கண்ணாடி தடுப்பை தாண்டி புறப்பாடு பகுதிக்குள் வீசினார். அங்கு நின்ற மற்றொரு இலங்கை பயணி அதை கேட்ச் பிடித்து, அவசர அவசரமாக சிறிது தூரத்தில் நின்ற, விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் பந்துகளை கொடுத்தார்.
இந்தக் காட்சிகளை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் உடனே 3 பேரையும் மடக்கிப்பிடித்து தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பந்துகளையும் உடைத்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். பந்துகளில் மொத்தம் 2.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.75 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் 3 பேரையும் கைது செய்த நிலையில், தங்கப் பசையையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தங்கப் பசை பந்துகளை தனது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியே எடுத்துச் சென்று விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் தயாராக நிற்கும் மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளனர்.
அந்த நபர் தங்கப் பசை பந்துகளை சென்னை நகருக்குள் கொண்டு செல்வார். இந்த வழக்கில், 3 பேரும் சிக்கிய நிலையில், கடத்தல் கும்பலின் தலைவன் உட்பட 2 பேர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். எனவே மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், தப்பி ஓடிய கும்பலின் தலைவன் உட்பட 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர், கடத்தல் குருவிகளான 2 பயணிகள் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியர் மற்றும் கடத்தல் குருவிகளில் ஒருவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும், திருமண செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கடத்தல் வேலையில் ஈடுபட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?