அரசு பள்ளியில் தலைதூக்கிய சாதி பிரச்சனை.. மெளனம் காக்கும் பள்ளிக் கல்வித்துறை?
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியர்களுக்கும் சில மாதங்களாக பனிப்போர் இருந்து வருகிறது. தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியை மீதும் மாறி மாறி புகார் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதிதாக தற்போது சாதி பிரச்சனை வெடித்திருக்கிறது .
அதாவது, ஒரு மாணவனை இரண்டு ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பள்ளி முதல்வர் ஈடுபட்டதோடு, குறிப்பிட்ட சமுதாய தலைவர்களை தங்களுக்கு ஆதரவாக பரிந்துரை செய்ய மாணவர் தரப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரும், சமுதாய தலைவர் ஒருவரும் அரசு தரப்பில் பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தலைமை ஆசிரியைக்கு எதிராக மொத்தம் உள்ள 60 ஆசிரியர்களில், 45 ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ஞானகவுரி இரண்டு முறை பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தியும் விசாரணை நடத்தினார். விசாரணை நடந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் பள்ளி கல்வித்துறை எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அமைதி காத்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நடந்தது என்ன என்பது பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியும் என்றும், விசாரணையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? என்றும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுக்காததை கண்டித்து ஆசிரியர்கள் அனைவரும் வரும் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளி திறந்ததும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்று தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் அவருக்கு எதிராக கையெழுத்திட்ட 45 ஆசிரியர்களையும் பணியிடமாறுதல் செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?