“சென்னை மழை... இது டீசர் தான்... நவம்பரில் சம்பவம் இருக்கு..” தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ்க்ளூசிவ்!

வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.

Oct 14, 2024 - 17:58
 0
“சென்னை மழை... இது டீசர் தான்... நவம்பரில் சம்பவம் இருக்கு..” தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ்க்ளூசிவ்!
சென்னை மழை அப்டேட் - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: நவம்பர் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்தே, சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கணிக்க முடியும் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளரான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமுதம் சேனலுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில், தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் 30ம் தேதி வரை, 440 மில்லிமீட்டர் மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1 முதல் இன்று வரை (அக். 13) 100 மில்லி மீட்டர் அளவில் தமிழ்நாடு முழுவதும் மழை பதிவாகியுள்ளது. வரும் நான்கு நாட்கள், முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் வரக்கூடிய நாட்களில் அதிக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், இந்தாண்டு எதிர்பார்க்கப்பட்ட 440 மில்லி மீட்டர் மழையின் அளவைவிட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். 

மேலும், வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்திலேயே அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்தே அதிக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் மட்டும் மிக அதிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தொடர் கனமழை பெய்வதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேக்கம் இயல்பாகவே காணப்படும் எனவும், நவம்பரில் பெய்யும் மழையின் அளவை பொருத்தே சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கான வாய்ப்புள்ளதா என்பதை கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். முக்கியமாக வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் வேண்டாம் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் இதனை சரி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கனமழை பெய்யும் பட்சத்தில், காற்றின் அளவு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும், இதனால் இந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் அளவிற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். முக்கியமாக வரும் 16, 17 ஆகிய தேதிகளில், சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும். தற்பொழுது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், வரக்கூடிய நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு வரும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு வரும் பட்சத்தில், வட உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் மலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதேநேரம் கோவை, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று முதல் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்டும், நாளை மறுநாளான அக்.16ம் தேதி ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 17ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow