இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழுவுமண்டலத்தினால், தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கும் சூழல் உருவாகிறது. தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 12 ஆம் தேதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை- தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (டிச.7) முதல் வரும் டிச.12 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (டிச.7,8) மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.